வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையக்கூடாது என்று தமிழக போலீஸ் டிஜிபி கடுமையாக எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

​தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக்கூடாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின்  அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். காவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று தங்களது கடமையை ஆற்ற வேண்டும்.

இது குறித்து மண்டல ரோந்துப் பிரிவினர் மற்றும் வயர்லெஸ் கருவிகள் மூலம் காவலர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதால், விதிமுறைகளை மீறும் காவலர்கள் உடனடியாகக் கண்டறியப்படுவார்கள். ​இந்த அறிவுறுத்தல்களை எவ்விதத் தெளிவற்ற நிலையும் இன்றி,  காவலர்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 எந்தவொரு வாக்குச்சாவடியிலும் இத்தகைய விதிமீறல்கள் நடைபெறாமல் இருப்பதை அந்தந்த உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மண்டல ஐ.ஜி-க்கள் மற்றும் சரக டி.ஐ.ஜி-க்கள்  தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். ​விதிமுறைகளில் இருந்து ஏதேனும் விலகல் அல்லது கவனக்குறைவு ஏற்பட்டால், அது மிகவும் தீவிரமாகக் கருதப்பட்டு கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version