நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் மற்றும் அதில் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து, தொகுதி வாரியாக விரிவான கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்காக திமுக தலைமை அமைத்த சிறப்புக் குழு, தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க இன்று (ஜூன் 10) கடைசி நாளாகும்.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுகவின் வாக்கு வங்கி சரிந்தது மற்றும் முக்கியத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 38 பேர் கொண்ட இந்த உயர்மட்ட கள ஆய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் கடந்த சில வாரங்களாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து (234) சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களை நேரில் சந்தித்து, தோல்விக்கான உண்மையான காரணங்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து விரிவாகக் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி குழுவின் இறுதி அறிக்கை இன்று தலைமைக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. குழுவில் இடம்பெற்றிருந்த முக்கியப் பொறுப்பாளர்கள் சிலர், தங்களது தொகுதி வாரியான கள ஆய்வு அறிக்கைகளை ஏற்கனவே திமுக தலைவரிடம் முன்கூட்டியே ஒப்படைத்துள்ளனர்.
எஞ்சிய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், தொண்டர்களின் கருத்துக்கள் மற்றும் கள நிலவரங்கள் அடங்கிய தங்களின் முழுமையான அறிக்கையை இன்று தலைமைப் அலுவலகத்தில் சமர்ப்பிக்கின்றனர். இதற்கிடையே, சில மாவட்டங்களில் கூடுதல் விவரங்களைச் சேகரிக்க வேண்டியிருந்ததால், சிலர் தலைமையிடம் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர். அவர்கள் தங்களது அறிக்கையை நாளை மறுநாள் (ஜூன் 12) சமர்ப்பிக்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துக் குழுக்களின் அறிக்கைகளும் முழுமையாகப் பெறப்பட்ட பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் கட்சியில் முக்கியப் பொறுப்பு மாற்றங்களும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
