முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய   விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவதூறாகப் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.

ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, தன்னை சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது, மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பாமல் நேரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், பதில்மனு தாக்கல் செய்ய  அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்ற நீதிபதி, மார்க்கண்டேயனின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version