முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 17 சொத்துக்கள் முடக்கத்தை நீக்கியதை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிகாலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384  ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2019 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, 18 சொத்துக்களை முடக்கம் செய்தது.

முடக்கத்தை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த அமலாக்கத் துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம், 18 சொத்துக்களில், 17 சொத்துக்கள் முடக்கத்தை சட்டவிரோதம்; முறையற்றது எனக் கூறி முடக்கத்தை நீக்கி,  கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அமலாக்கத் துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 17 சொத்துக்கள் முடக்கத்தை நீக்கி, விடுவித்த உத்தரவில், மேல் முறையீட்டு தீர்ப்பாயம் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், லஞ்ச ஒழிப்புத் துறை முடக்கிய சொத்துக்களையும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களையும் முடக்க முடியாது என அமலாக்கத் துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு தவறானது எனவும், குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்து என அடையாளம் காணப்பட்ட அனைத்து சொத்துக்களையும் முடக்க அமலாக்கத் துறைக்கு உரிமம் உள்ளது என வாதிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், அதிக மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அமலாக்கத் துறை மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை  முடக்கம் நீக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version