அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜிஆர் மாளிகையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தினை துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியால் அவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மகளிர் அணியினை இன்னும் வலுப்படுத்தும் வகையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கூடுதலாக உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசுகையில், அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டு கண்ட அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தால் அது முடியாது. மக்கள் அதிமுகவிற்கு தான் வாக்களித்து ஒவ்வொருவரையும் எம்.எல்.ஏ.வாக ஆக்கினார்கள். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து சிலர் தங்கள் கட்சியில் இணைக்கிறார்கள். இப்படி ஒரு ஆட்சியை நடத்த முதல்-அமைச்சர் விஜய்க்கு அருகதை உள்ளதா?. என வினா எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அதிமுக மகளிர் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1 – தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி
2 இரவு பகலாக அதிமுகவுக்காக அல்லும் பகலும் தேர்தல் பணிகளை மேற்கொண்ட கட்சியின் பொதுச் செயலாளருக்கு நன்றியும் பாராட்டு
3 பெண்கள் மற்றும் பெண் குழந்தைக்கு எதிராக தோற்றம் பாலியல் வன்கொடுமையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் தவெக பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்
4 அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் முறைகேட நடைபெற்றதாக எழும் புகார் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்கள் தகுதியானவர்கள் நியமிக்க அரசுக்கு வலியுறுத்தல்.
5 தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6 – எதிர்வரும் சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் பணிகளை கண் தூங்காமல் கடமை உணர்வோடு ஆற்றி கட்சிக்கு மகளிர் அணி பெருமை சேர்த்திடவேண்டும்.
