விவசாயிகளின் முழு பயிர்க் கடன் தள்ளுபடி மற்றும் இலவச சோலார் மின் திட்டம் தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக வேளாண்துறை செயலாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற புதிய திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அவர், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய 20 துறைகளுக்கு மொத்தம் ரூ.58,374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட ரூ.12,713 கோடி அதிகம் என்றும் தெரிவித்தார்.
புதிய திட்டங்கள்
தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் என்ற புதிய 5 ஆண்டு திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தென்னை மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்காக ரூ.22.30 கோடி, விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
500 பேருக்கு ட்ரோன் பயிற்சி வழங்கவும், 50 பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கவும் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 4 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள், உயிர் மற்றும் இயற்கை வேளாண்மைக்கு ரூ.17.12 கோடி, நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு சிறப்பு மானியம் உள்ளிட்ட 19 புதிய திட்டங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நெல் மானியம் நிறுத்தம்
மத்திய அரசு வழங்கி வந்த நெல் விதை மானியம் நிறுத்தப்பட்டதால், முதலமைச்சரின் உத்தரவின்படி மாநில அரசு ரூ.34.72 கோடி ஒதுக்கி நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்தை தொடருவதாகவும், ஏற்கெனவே குறுவை சாகுபடிக்காக ரூ.8 கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மொத்த ஒதுக்கீடு ரூ.42 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எல் நினோ தாக்கம்
எல் நினோ காரணமாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாக கூறிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மழை தாமதமானால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே செயல் திட்டம் தயாரிக்கப்படும் என்றார். அந்த அறிக்கைகள் மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், காவிரியில் போதிய நீர் வந்தால் தற்போதைய சிக்கல்கள் குறையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
கடன் தள்ளுபடி பரிசீலனை
விவசாயிகளின் முழு பயிர்க் கடன் தள்ளுபடி மற்றும் இலவச சோலார் மின் திட்டம் தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும், ஆனால் அது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட முடியாது என்றும் செயலாளர் சங்கர் தெரிவித்தார்.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமாக 60 லட்சம் மெட்ரிக் டன் நெல் வந்ததால் தற்காலிக இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தாலும், அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார். அத்துடன் விவசாயப் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.648 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சங்கர் தெரிவித்தார்.
