இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வ செயல் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொண்டு வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் தன்னை போலவே 20 இளம் பெண்கள் வரை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், தெய்வச்செயல் மீது நான்கு பிரிவுகளின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, முன் ஜாமீன்க்கோரி தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி கனிமொழி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனக்கெதிராக புகார் அளித்து பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்துக்கோரி அவரது கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார். விவாகரத்து பெறாத நிலையில் அந்த பெண்னுக்கும், தமக்கும் கரைக்காலில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் நடைபெற்றதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் தமக்கு எதிராக அந்த பெண் போலீசிலும், சமூக வலைத்தளங்களிலும் பொய் புகாரை அளித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தினால் உண்மைத் தன்மை தெரியவரும் எனவும் இந்த வழக்கில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தேவையில்லை என்பதால் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கவேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிந்துகொள்ள: அரக்கோணம் விவகாரம் : நுழைந்தது தேசிய மகளிர் ஆணையம்…
இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரளித்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தெய்வசெயல் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.