அமெரிக்கா உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தங்கள் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும் எண்ணெய் விற்க முடியாது என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சாளருமான முகமது பாகர் காலிபாஃப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போரின் சமன்பாடு மிகத் தெளிவானது என குறிப்பிட்டுள்ளார். ‘எல்லாம் அல்லது எதுவும் இல்லை என கூறியுள்ள அவர், நாங்கள் எண்ணெய் விற்க முடியாத பிராந்தியத்தில், வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாது என எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். அதற்குப் பதிலடியாக ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றால், மத்திய கிழக்கில் உள்ள எந்தவொரு நாட்டின் மின்சார, எரிவாயு மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளும் பாதுகாப்பாக இருக்காது என்றும், அமெரிக்கப் படைகள் வெளியேறினால் மட்டுமே ஹார்முஸ் நீரிணையில் அமைதி திரும்பும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
