தவெக ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்த முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குதிரை பேரம் தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பேசிகள் மற்றும் பிற ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், சீனிவாசன், செல்வன், ராஜசேகர், சேதுராஜ் மற்றும் கணேசன் ஆகிய எட்டு பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தற்போதைய விசாரணை நிலை மற்றும் குற்றச்சாட்டுகளின் தன்மையை கருத்தில் கொண்டு, எட்டு பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால், குதிரை பேரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்த எட்டு பேரும் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் நீடிக்க உள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை திருவல்லிக்கேணி காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
