தமிழக காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 28 தொகுதிகளில் களம் கண்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளை வென்றது. தவெகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் கிடைத்து, பெரும்பான்மைக்கான ஆதரவை விஜய் தேடிய நிலையில், கூட்டணித் தலைமையிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஓடிச் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விஜய்க்கு தனது ஆதரவை அளித்தது. அதற்கு பிரதியுபகாரமாக, காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் இந்தப் போக்கை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. 20 ஆண்டுகளாகத் தூக்கிச் சுமந்த நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வெளியேறிய நம்பிக்கைத் துரோகி காங்கிரஸ் என உதயநிதி, திமுக இளைஞரணிக் கூட்டத்தில் சாடியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவும் தன்பங்குக்கு வசைபாடத் தொடங்கியிருக்கிறது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான இன்பதுரை, தமிழக காங்கிரஸ் என்பது ஒரு ஒட்டுண்ணி! தமிழ்நாட்டில் அதற்கு சுயமாக வாழும் தகுதி கிடையாது என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
விஜய்க்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதால்தான், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளித்ததாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார்.
தற்போது திமுகவைத் தொடர்ந்து அதிமுகவும் காங்கிரஸை திட்டத் தொடங்கியிருப்பதைப் பார்த்தால், அது உண்மைதானோ என நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
