டெல்லியில் இன்று இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகளின் பிரம்மாண்ட மகாபஞ்சாயத்து கூட்டப்பட்டது. தேசம் பச்சாவ் மோர்சா அமைப்பின் சார்பில் பஞ்சாப், அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச விவசாய அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அதன் மூலம் அமெரிக்க வேளாண் பொருட்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் என்பதால் சிறு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பை சந்திப்பார்கள் என்ற அச்சத்தில் விவசாயிகள் திரண்டுள்ளனர். பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாகப் புறப்பட்ட நிலையில், பஞ்சாப்-அரியானா எல்லையான ஷம்பு பகுதியில் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இரும்பு முள் கம்பிகள், தடுப்புகள் மற்றும் பேரிக்கேட்கள் உள்ளிட்டவற்றால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
டெல்லி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கோபமடைந்த விவசாயிகள் ஷம்பு எல்லையையே போராட்டக் களமாக மாற்றினர். கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் இதே ஷம்பு எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் அதே இடத்தில் தடுப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். டெல்லியில் ஏற்கனவே NEET உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான இளைஞர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய பின்னணியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
விவசாயிகளின் முக்கிய எதிர்ப்பு: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க விவசாயப் பொருட்களான சோயாபீன், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்க அதிகாரிகள் இதை தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு “வரப்பிரசாதம்” எனக் குறிப்பிட்டது வைரலானது. மானியங்கள் பெறும் அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்தால், உள்நாட்டு சிறு விவசாயிகள் போட்டியிட முடியாமல் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்று அமைப்புகள் எச்சரிக்கின்றன.
குறிப்பாக, இந்தியாவில் சுமார் 8 கோடி கிராமப்புற குடும்பங்கள் பால் பண்ணைத் தொழிலை நம்பியிருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் கிராமப்புறப் பொருளாதாரத்தை முழுமையாகச் சீர்குலைக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
கோரிக்கைகள்: ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாக பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுடன் விரிவான கலந்தாய்வு நடத்தாமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பது விவசாய அமைப்புகளின் முக்கியக் கோரிக்கையாகும். இந்தப் போராட்டம் நாட்டின் பொருளாதார அமைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் முக்கியமான விவகாரமாகக் கருதப்படுகிறது.
