புதுடெல்லி, ஜூலை 19: இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், சான்சிபார்(Zanzibar) அதிபரும் புரட்சிகர கவுன்சிலின் தலைவருமான டாக்டர் ஹுசைன் அலி ம்வினி(Dr. Hussein Ali Mwinyi)யுடன் இன்று உபராஷ்டிரபதி பவனில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில், இந்தியா–தான்சானியா இடையேயான நீண்டகால நட்புறவும், குறிப்பாக சான்சிபாருடன் இந்தியா பகிர்ந்து வரும் பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார், கலாச்சார மற்றும் மக்களிடையேயான உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன.
மேலும், வர்த்தகம், முதலீடு, வளர்ச்சிக் கூட்டாண்மை, சுற்றுலா, நீல பொருளாதாரம் (Blue Economy), கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பன்முக சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது, சென்னை ஐஐடி வளாகத்துக்கு அண்மையில் மேற்கொண்ட பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டாக்டர் ஹுசைன் அலி ம்வினி, ஐஐடி மெட்ராஸ் – சான்சிபார் வளாகம் அமைப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், குடிநீர் திட்டங்கள், இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) உதவித்தொகைகள் மற்றும் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) பயிற்சி திட்டங்கள் மூலம் இந்தியா வழங்கி வரும் ஆதரவையும் அவர் பாராட்டினார்.
இதையடுத்து, இந்தியா, தான்சானியா மற்றும் சான்சிபாரின் வளர்ச்சிக் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் முன்னுரிமை துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாக துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
