தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்படி கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 41 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதன் பிறகு தேர்தல் முடிந்தும் கூட விஜய் கரூர் பக்கம் செல்லவில்லை. மாறாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னை வரவழைத்து இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகும், முதலமைச்சர் ஆன பிறகும் முதல் முறையாக கரூருக்கு செல்கிறார் விஜய். வரும் 10ம் தேதி அவர் கரூருக்கு செல்ல இருப்பதால், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கரூர், வெண்ணைமலை அடுத்துள்ள அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கும் பணிகள், நிகழ்வு நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5000 பேருக்கும் QR உடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுதாரர்கள் சிலருக்கு முதல்வர் விஜய் அரசு வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
