சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது மத்திய அரசு பின்னால் ஒளிந்து கொள்வது ஏன் என முதல்வர் விஜய்க்கு திமுக காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.
விவகாரத்தில் தேர்தலுக்கு முன் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து தற்போதைய தமிழக அரசு பின்வாங்கி வருவதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி குற்றம்சாட்டியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தவெக அரசின் உரையை ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.அதில் ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் வெளியானதும், தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்காய்வு (Social Justice Audit) மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதாவது, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும். அதற்கான தரவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வை மேற்கொள்ளும். இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி திட்டங்கள் பயனாளர்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பது ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே தற்போது அரசியல் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. காரணம், எதிர்க்கட்சியாக இருந்தபோது விஜய், மாநில அரசே “Caste Survey” போன்ற முன்னோட்ட ஆய்வை நடத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் உரையில் ஒன்றிய அரசின் கணக்கெடுப்புக்குப் பிறகு சமூகநீதி கணக்காய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டிருப்பதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றன.

இதுதொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியாளர்களின் ‘சமூக நீதி வேடம்’ கலைகிறது..
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, “தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பைத்தான் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாகத் திகழும் Caste Survey என்ற ஆய்வை மாநில அரசே நடத்தலாமே? அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா” என வீரவசனம் பேசினார் விஜய்.
இன்று ஆட்சிப்பெறுப்பேற்ற பின், சமூகநீதி கணக்காய்வினை மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசின் பின்னால் பதுங்கிக் கொள்வது ஏன்? இதற்குப் பெயர் இரட்டை வேடமா? அல்லது பச்சோந்தித்தனமா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளது.
