முதலமைச்சர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம், கடந்த ஜனவரி 9 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தணிக்கை வாரியத்திடமிருந்து உரிய நேரத்தில் சான்றிதழ் கிடைக்காததால், படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. தணிக்கைச் சான்று வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. அப்போது தனி நீதிபதி, படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்கும்படி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், தனி நீதிபதியின் தீர்ப்புக்குத் தடை விதித்தது. படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பத் தணிக்கை வாரியம் முடிவு செய்திருந்தது. 14 காட்சிகளை நீக்க வேண்டும் என்று வாரியம் வலியுறுத்தியது. தயாரிப்பு நிறுவனம் தணிக்கை வாரியம் வெளிப்படையாகச் செயல்படவில்லை என்றும், இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் வாதிட்டது. 

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 10ம் தேதி இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டது. 

நீண்ட இழுபறிக்குப் பிறகு, தயாரிப்பு நிறுவனம் தணிக்கை வாரியத்தின் பரிந்துரைப்படி இறுதித் திருத்தங்களை மேற்கொண்டது. இதையடுத்து, இன்று (ஜூலை 9) ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் ‘ஏ’  சான்றிதழ் வழங்கியது. தணிக்கை வாரியத்தின் தரவுகளின்படி, ‘ஜன நாயகன்’ திரைப்படம் மொத்தம் 183.11 நிமிடங்கள் (சுமார் 3 மணிநேரம் 3 நிமிடங்கள்) ஓடும் கால அளவைக் கொண்டுள்ளது. சான்றிதழ் கிடைத்துவிட்டதால், இப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version