சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய பாலாஜி, கமலி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சுதந்திர போராட்ட வீரர் தியாகி மாவீரர் தீரன் சின்னமலை 221வது நினைவு நாளில் அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம்.
முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் 1992ம் ஆண்டு முதன்முதலில் தீரன் சின்னமலையின் வரலாற்று புத்தகத்தை வெளியிட்டு மணி மண்டபத்தை அமைத்தார்.
தவெக தலைவர் விஜய் ஆட்சியில், ஒவ்வொரு தலைவருக்கும் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் சிறப்பு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இன்று ஆடி 18 பெருக்கு நாளில், முதல்வராக விஜய் பொறுப்பு ஏற்ற பிறகு, காவிரி ஆற்றில் ஆடி பெருக்கு கொண்டாடும் வகையில் உபரி நீர் வந்து கொண்டு இருக்கிறது. எல்லா அணைகளில் கூடுதலாக தண்ணீர் நிரம்பும் நிலை உள்ளது.
நல்லவர் ஆட்சியில் இருந்தால் மழை பெய்யும் என்று சொல்வதற்கு ஏற்ப, முதல்வர் விஜய் நல்லாட்சிக்கு முத்தாய்ப்பாக ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
முதல்வராக விஜய் பொறுப்பு ஏற்ற பின்னர் ஆடிப் பெருக்கு விழாவில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணைகளும் நிரம்பும் நிலையை எட்டவுள்ளது.
தூய்மையான ஆட்சி, மத்திய அரசு பாராட்டும் ஆட்சியை இந்தியாவில் முன்மாதிரியாக தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
