தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் தக் லைப். இப்படம் நாளை மறுநாள் அதாவது 5-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதன் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் கடந்தவாரம் நடைபெற்றது. அதில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக பேசிய நடிகர் கமல், தன்னுடைய சகோதரன் என்ற தொனியில் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று குறிப்பிட்டார்.
அவரது இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட மொழி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதலமைச்சர் சித்தாமையா கூட, கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும், எப்படி அவ்வாறு பேசலாம் என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். உச்சக்கட்டமாக கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சேம்பர் அறிக்கை வெளியிட்டது.
ஆனால் தான் மன்னிப்புக் கேட்கபோவதில்லை என்று கமல் மற்றொரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக அறிவித்து விட்டார். இந்நிலையில், படத்தை வெளியிட அனுமதி கோரியும், படம் வெளியாகும் திரையங்குகளில் பாதுகாப்புக் கோரியும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீங்கள் (கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். நீங்களோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உண்ர்வுகளை புண்படுத்த கூடாது . கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கர்நாடக உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் பெருவாரியான அரசியல் கட்சிகள், கமல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல் கூறியதில் தவறே இல்லை என்று கூறியிருந்தார்.
நாளை மறுநாள் படம் வெளியாக உள்ளநிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்து, கர்நாடகாவில் தக் லைப் வெளியாகுமா என்ற கேள்வியை உருவாக்கி உள்ளது.