போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சென்னித்தலா, இரு மாநிலங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

கேரள அரசு ஏற்கனவே போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக “ஆபரேஷன் துஃபான்” என்ற சிறப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பலர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்புக்காக முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என குறிப்பிட்ட அவர், இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட்டால் கடத்தல் வலையமைப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

மேலும், போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் கேரள அரசின் பிராண்ட் தூதர் நடிகர் மோகன்லால் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதன் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் வழியாக போதைப் பொருட்கள் வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக ரமேஷ் சென்னித்தலா தெரிவித்தார்.

கேரளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கேட்டறிந்ததாக அவர் கூறினார். இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version