மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாக செல்போனில் பேசுவது, ஸ்பீக்கர் மோடில் பாடல் அல்லது வீடியோ ஒலிக்கச் செய்வது போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ மெட்ரோ ரயில்கள் மற்றும் வளாகங்களில் செல்போன் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது, காதில் ஹெட்போன் (Headphone) பொருத்திக் கொள்ளாமல் இசை, வீடியோக்கள் பார்ப்பது, செல்போனில் உரத்த குரலில் பேசுவது ஆகிய செயல்கள் மூலம் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் செல்போன்களைப் பயன்படுத்துவதும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’-ன் கீழ் ஒரு புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கான அபராத தொகை ரூ.500-ல் இருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் உரத்த குரலில் பேசுவது, ஒலிபெருக்கி பயன்படுத்துவது (ஸ்பீக்கர் மோடு) ஆகியவற்றை தவிர்த்து, காதில் பொருத்திக் கொள்ளும் ஹெட்போன்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
