பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரு காவலர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றச்செயலில் ஈடுபடுவது மீண்டும் நடைபெறாத வகையில், இரவு ரோந்து பணிகளை ஆண்டுதோறும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் டிஜிபிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை தேவையின்றி ஒத்திவைக்கக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
போக்சோ வழக்குகளில், பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலத்தை 30 நாட்களுக்குள் பதிவு செய்து, ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், போக்சோ நீதிபதிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அதிரடிப்படையை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கடலூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலியாக உள்ள போக்சோ நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்பவும், மாநிலம் முழுவதும் ஆறு புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து இரண்டு மாதங்களுக்குள் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
