திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த நபரை சில பெண்கள் செருப்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமி ஒருவர், மதுரையிலிருந்து சேலம் நோக்கி திண்டுக்கல் வழியாகச் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, பேருந்து நடத்துனரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், நடத்துனர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிறுமி தனது செல்போன் மூலம் உறவினர்களை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பேருந்து திண்டுக்கல் அருகே வந்தபோது சிறுமியின் உறவினர்கள் பேருந்தை வழிமறித்து ஏறி, குற்றம்சாட்டப்பட்ட நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும், அங்கு திரண்டிருந்த பொதுமக்களும் உறவினர்களும் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன், சில பற்களும் உடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கூடியிருந்த சில பெண்கள் செருப்பால் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த நபரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற பிறகும் நீண்ட நேரம் “சிங்கப்பெண்கள் பாதுகாப்புப் படை” சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version