கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு பாதுகாப்பு விதிமுறைகளின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியர் மீது, தன்னை “அமைச்சரின் உறவினர்” எனக் கூறிய நபர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மதுபோதையில் வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அரசு உத்தரவு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை சுட்டிக்காட்டி பெட்ரோல் பங்க் ஊழியர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், “நான் த.வெ.க. அமைச்சரின் அண்ணன் மகன்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஊழியர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “அமைச்சரின் உறவினர்” எனக் கூறி தாக்குதலில் ஈடுபட்டதாக வெளியான தகவலும், சம்பவத்தின் செல்போன் வீடியோவும் காந்திபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
