இந்திய கடற்படையை பலப்படுத்தும் நோக்கில், சுமார் ரூ.90,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜெர்மனியும் விரைவில் கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் தெரிவிக்கையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம் மிக விரைவில், அடுத்த சில வாரங்களுக்குள் இறுதி செய்யப்படலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்புத் திட்டமான ‘புராஜெக்ட் 75I’ திட்டத்தின்கீழ், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 6 புதிய வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்படவுள்ளன.

இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படாமல், இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் மும்பையில் உள்ள மசாகன் டாக் கப்பல்கட்டும் நிறுவனத்தில் ஜெர்மனியின் ‘திச்கிரூப் மரைன் சிஸ்டம்ஸ்’  நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே கட்டப்படவுள்ளன.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் எரிபொருள் செல் அடிப்படையிலான ‘ஏர் இன்டிபென்டன்ட் பிரபல்ஷன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கு அடியில் மேற்பரப்புக்கு வராமல் நீண்ட வாரங்களுக்குத் தொடர்ந்து இயங்க முடியும்.

விலை நிர்ணயம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் இறுதி ஒப்புதலுக்காக இந்த ஒப்பந்தம் காத்திருக்கிறது. இந்தியக் கடற்படையின் பலத்தை பன்மடங்கு உயர்த்தும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version