மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு கோயில் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும், தீபம் ஏற்றுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாது எனவும், பாரம்பரிய வழக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்புக் அனுமதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும், மத நல்லிணக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வாதிடப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வின் முன்பு ஆகஸ்ட் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
