தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், வெற்றிகரமான நடிகர் மற்றும் பாடகர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டு விளங்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இன்று (ஜூன் 13) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது அசாத்திய திறமையால் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முத்திரை பதித்துள்ள அவரது இசை மற்றும் கலைப் பயணம் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு இதோ.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜி.வி.பிரகாஷ், சிறு வயதிலேயே இசைச் சூழலில் வளர்ந்தவர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” பாடலில் சிறுவனாகத் தனது குரலைப் பதிவு செய்தவர், பின்னர் ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களிலும் பாடினார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அந்நியன்’ படத்தில் பாடிய “காதல் யானை வருகிற ரெமோ” பாடல் இவருக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
அதாவது, அந்நியன் திரைப்படத்தில் இசைமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான “காதல் யானை” பாடலின் தொடக்கத்தில் வரும் “ஹை ஹீல்ஸ் சிங்காரி…” என்ற ராப் போன்ற துரிதமான வரிகளையும், பாடலின் இடைப்பகுதிகளையும் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.
2006ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில் திரைப்படத்தின் மூலம், தனது 19-வது வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே “உருகுதே மருகுதே” போன்ற காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
அதன்பின்னர், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களான செல்வராகவன், வெற்றிமாறன் மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோருடன் இணைந்தார்.
வெற்றிமாறன் கூட்டணியில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ மற்றும் ‘வாடிவாசல்’ வரை இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பின்னணி இசையை வழங்கியுள்ளது. ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மதராசப்பட்டினம்’, ‘ராஜா ராணி’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்கள் இவரது இசைப் பயணத்தின் மைல்கற்கள் ஆகும்.
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷிற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்தது. இவரது துடிப்பான இசையும், உணர்வுப்பூர்வமான பின்னணி இசையும் அந்தத் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன.
இசையமைப்பாளராக உச்சத்தில் இருக்கும்போதே, ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘நாச்சியார்’, ‘பேச்சுலர்’ மற்றும் சமீபத்தில் வெளியான படங்கள் வரை ஒரு நடிகராகவும் தன்னைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். குறிப்பாக, ‘நாச்சியார்’ திரைப்படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகைத் தாண்டி, ‘Trap City’ என்ற சர்வதேச ஆல்பம் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் பல படங்களுக்கும் மேல் இசையமைத்து, இன்றும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ‘இசை அசுரனாக’ வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்!
