விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசின் அவசரக் கால இருப்பு திட்டத்தின் கீழ் வெங்காயத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலை இன்று (ஜூன் 13) முதல் உயர்த்தப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரை கிலோவுக்கு ரூ.15.80 ஆக இருந்த குறைந்தபட்ச கொள்முதல் விலை, இன்று முதல் ரூ.16.50 ஆக (குவிண்டாலுக்கு ரூ.1,650) உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள், சாகுபடிச் செலவு அதிகரித்துள்ளதைக் சுட்டிக்காட்டி, கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.30 ஆக (குவிண்டாலுக்கு ரூ.3,000) உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதைய உயர்வு போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
விலை நிலைநிறுத்த நிதியத்தின் (PSF) கீழ், கடந்த 2025-26 நிதியாண்டில் 3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் 2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மத்திய கூட்டுறவு அமைப்புகளான நாஃபெட் (NAFED) மற்றும் என்சிசிஎஃப் (NCCF) மூலம் கடந்த மே 15 முதல் வெங்காயக் கொள்முதல் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
