கல்வராயன் மலையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வன்னிஅரசு எச்சரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, கல்வராயன் மலையில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், கல்வராயன் மலையில் உள்ள கீழ்தேவனூர், மேல்தேவனூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தபோது, தங்களுக்கு சாலை வேண்டும், ரேஷன் கடை வேண்டும், அங்கன்வாடி மையம் வேண்டும் என, கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதுகுறித்து பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து, இடைநிற்றல் இல்லாத கல்வி வேண்டும் என்ற அவசியத்தை கவனத்தில்கொண்டு, ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக கருதினால், இனி பாலியல் தொல்லை என்ற பிரச்சினைக்கே இடமில்லாமல் போகும் என்பதால் கல்வராயன் மலையில் உள்ள 47 தலைமை ஆசிரியர்களை வரவழைத்து, கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி இருக்கின்றோம்.
இனிவரும் காலங்களில் மாணவிகளை கண்டிக்க வேண்டிய இடத்தில் ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும். அன்பு காட்ட வேண்டிய இடத்தில் அன்பு காட்ட வேண்டும். இதை மீறி பாலியல் தொல்லை, சீண்டல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், சத்தியமங்கலமாக இருக்கட்டும், சேலம் கத்தரி மலையாக இருக்கட்டும், கல்வராயன் மலையாக இருக்கட்டும் எல்லா இடங்களுக்கும் நான் சென்றுள்ளேன். இதில், கல்வராயன் மலையில் உள்ள மக்களோடு, கடந்த கால் நூற்றாண்டு காலமாக தொடர்பில் இருந்து வருகிறேன்.
அப்போது, அன்னபிஷியலாக வந்தேன். தற்போது அபிஷியலாக வந்திருக்கிறேன். அந்த வகையில், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்களோடும், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களோடும் நான் பழகுவது இயல்பான ஒன்றுதான்.
கடந்த கால ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் கல்வராயன் மலை மக்களுக்காக நன்றாக செயல்பட்டு இருந்திருக்கலாம். அல்லது அதிகாரிகளிடத்தில் சொல்லி திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்த 5 ஆண்டு காலம் நேரடியாக வருவேன் என்றார்.
