சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், விளாத்திகுளம் எம்எல்ஏ கைது விவகாரம், திமுக குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து விளக்கம் அளித்தார்.
விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பேசிய அமைச்சர், பொதுக்கூட்ட மேடையில் முதலமைச்சரை அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதாக கூறினார். அதன்பேரில்தான் புகாரின் அடிப்படையில் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” என விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டபோது, “முதல்வரின் கையை உடைப்பேன் என்று வெளிப்படையாக பேசிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. பொதுவெளியில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுப்பது சட்டவிரோதமான செயல்” என்று பதிலளித்தார்.
மேலும், கடந்த திமுக ஆட்சியில் சமூக வலைதள பதிவுகளுக்கே குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், 70 வயது மூதாட்டியை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் உயிருக்கு அச்சுறுத்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “கைது என்பது வழக்கமான நடைமுறை. இதில் உயிருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. கரூரில் ஒருவர் கட்டிலுக்குக் கீழே சென்று அழுதார்; இன்று மற்றொருவர் காரில் மயக்கம் வருகிறது என்கிறார். திமுகவினர் தொடர்ந்து டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறையினர் தங்கள் கடமையை மட்டுமே செய்துள்ளனர்” என்றார்.
அதிமுகவில் இருந்து விலகும் நிர்வாகிகள் குறித்து கேட்கப்பட்டபோது, அவர்கள் கட்சித் தலைமையின் மீதான அதிருப்தியால் வெளியேறுவதாகவும், அதை “குதிரை பேரம்” என்று கூறுவது தவறானது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். “குதிரை பேரம் என்பது எங்கள் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதைத்தான் குறிக்கும்” என்றும் அவர் விளக்கமளித்தார்.
