பிரதமர் நரேந்திர மோடி 4,399 நாட்கள் பதவியில் நீடித்து சாதனை படைத்துள்ளதாக பாஜக மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, நரேந்திர மோடி தொடர்ந்து 4,399 நாட்கள் நாட்டின் பிரதமராக நீடிப்பது பாராட்டுக்குரிய ஒரு சாதனைதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது ஜவாஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துவிட்டது என்று கூறுவது முற்றிலும் தவறான தகவல். 1947 முதல் 1952 வரையிலான காலகட்டத்தில் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்ற வரலாற்று உண்மையை யாரும் மறந்துவிடவோ அல்லது வரலாற்றிலிருந்து நீக்கிவிடவோ முடியாது.
பாஜக தனது அரசியல் லாபத்திற்காக இப்படி ஒரு கணக்கைக் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஊடகங்கள் எந்தவிதமான விளக்கமும் தராமல், பாஜகவின் இந்த வாதத்தை அப்படியே செய்தியாக வெளியிடுவதுதான் ஆச்சரியமளிக்கிறது.
தற்போதைய பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியை நாம் பாராட்டுவோம்; அதே வேளையில், பாரத ரத்னா ஜவாஹர்லால் நேருவின் 17 ஆண்டு கால அரும்பெரும் சாதனையைப் போற்றிப் பாதுகாப்போம். குறிப்பாக, 1947 முதல் 1952 வரை ஆரம்பக் கட்டத்தில் இருந்த இந்திய ஜனநாயகத்தைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்த பெருமை நேரு அவர்களையே சாரும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
