2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மேற்கொண்ட நிதி நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவின் ஃபெடரல் புலனாய்வு அமைப்பு (FBI) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த அமைப்பின் தலைவர் கிளாடியோ டாபியா (Claudio Tapia) தலைமையில், அர்ஜென்டினா கால்பந்து சங்கம் பல மில்லியன் டாலர்களை அமெரிக்க நிதி அமைப்புகளின் மூலம் எவ்வாறு கையாண்டது மற்றும் இதில் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் புளோரிடாவைச் சேர்ந்த ‘TourProdEnter LLC’ என்ற நிறுவனம் முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் வெளிநாட்டு நிதிப் பொறுப்புகளைக் கவனித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகச் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 260 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. மீதமுள்ள 57 மில்லியன் டாலர் தொகை, தெளிவான வணிகக் காரணம் ஏதுமின்றி பல பயனாளிகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தத் தொகையைப் பெற்ற பல நிறுவனங்கள், எவ்விதச் சேவையும் வழங்காதவை என்றும், சமூக நலத்திட்டங்களின் கீழ் உதவி பெறும் நபர்களால் இவை கட்டுப்படுத்தப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சர்வதேச விசாரணைக்கு முன்னரே, அர்ஜென்டினாவில் கிளாடியோ டாபியா பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். வரி ஏய்ப்பு, சமூகப் பாதுகாப்பு நிதியை முறையாகச் செலுத்தாதது மற்றும் சொத்து முறைகேடுகள் தொடர்பாக அவர் மீது உள்ளூர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக, அவருக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் தலைமைக் கழகத்தில் காவல்துறை நடத்திய சோதனைகள் மற்றும் சொத்து முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளால், உலகக் கோப்பைத் தொடரின் முக்கிய தருணத்தில் அர்ஜென்டினா கால்பந்து நிர்வாகம் பெரும் நெருக்கடியில் உள்ளது.
