நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA ) அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று பாட நிபுணர்கள், தேர்வு வினாக்களை பல்வேறு முறைகளில் வெளியே கொண்டு சென்று கசிவுக்கு காரணமாக இருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
டெல்லி விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், உயிரியல் நிபுணர் மனிஷா மந்தாரே, வேதியியல் நிபுணர் பிரல்ஹாத் வித்தல்ராவ் குல்கர்ணி, இயற்பியல் நிபுணர் மனிஷா சஞ்சய் ஹவால்தார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சிபிஐ விசாரணையின்படி, தேசிய தேர்வு முகமையின் ரகசியப் பிரிவில் மொழிபெயர்ப்பு பணிக்காக வழங்கப்பட்ட வெற்று தாள்களை குல்கர்ணி சிறிய சீட்டுகளாக கிழித்து, 135 வேதியியல் வினாக்களையும் அவற்றின் விடைத் தேர்வுகளையும் சுருக்கமாக எழுதி வெளியே கொண்டு சென்றுள்ளார். பின்னர் இணைக் குற்றவாளி மனிஷா வாக்மரே உதவியுடன் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி, மாணவர்களுக்கு அந்த வினாக்களையும் சரியான பதில்களையும் கூறியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
உயிரியல் பாட நிபுணரான மனிஷா மந்தாரே, தாவரவியல் மற்றும் விலங்கியல் வினாக்களை மொழிபெயர்த்த பிறகு, ஹோட்டல் அறைக்குத் திரும்பி, அதனுடன் தொடர்புடைய பகுதிகளை NCERT பாடப்புத்தகங்களில் குறியிட்டு வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் தனது புனே இல்லத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இயற்பியல் நிபுணரான மனிஷா ஹவால்தார், வினாக்களை மனப்பாடம் செய்து, பின்னர் ஹோட்டல் அறையில் அவற்றை சுருக்கமாக எழுதி வைத்ததாக சிபிஐ கண்டறிந்துள்ளது.
விசாரணையில் மேலும் வெளிச்சத்துக்கு வந்த முக்கிய அம்சம், NTA அலுவலகத்தின் ரகசியப் பிரிவிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் இந்த நிபுணர்களிடம் உடல் சோதனை (Frisking) நடத்தப்படவில்லை என்பதாகும். மேலும், அந்தப் பிரிவை கண்காணிக்கும் தனி CCTV கட்டுப்பாட்டு அறையும் இல்லாதது பாதுகாப்பு குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் வெறும் 20 முதல் 25 நாட்கள் வரையிலான CCTV காட்சிகள் மட்டுமே கிடைத்ததாகவும், வினாத்தாள் கசிவில் பாதுகாப்பு நடைமுறைகளில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
