நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று (ஜூன் 21) பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் (22.79 லட்சம்) மாணவர்கள் எழுதுகின்றனர்.

கடந்த மாதம் மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன் மற்றும் தேர்வின் வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை  அந்தத் தேர்வை ரத்து செய்து, இன்று மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

இதனால் கடந்த 37 நாட்களில் நாடு முழுவதும் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கோவை, சேலத்தைச் சேர்ந்த மாணவிகள் மறுதேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், திட்டமிட்டபடி நீட் மறுதேர்வு இன்று நடக்க உள்ளது.

முந்தைய முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த முறை என்.டி.ஏ  முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு, 1.3 லட்சத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

தேர்வை நடத்த, இந்தியா மற்றும் 14 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 551 நகரங்களில் 5,440 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் ஜிபிஎஸ் வசதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மட்டுமே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 1:30 மணிக்கு மேல் வந்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சுமார் 551 இந்திய நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் இந்த மறுதேர்வு தற்பொழுது எவ்வித புகாருமின்றி அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version