டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நாளையும் (ஜூலை 25) தொடரும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வந்தது. ஜூலை 20-ம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தியது, கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது போன்ற சம்பவங்களால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஜேபி (CJP) அமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் போராட்டக்காரர்களின் பிரச்சினைகளை அரசு தரப்பு கேட்டறிந்தது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிகிறது.
போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைத் தீர்க்க பல்வேறு கோணங்களில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் நிபந்தனைகள் குறித்துக் கேட்டறிந்துள்ளதாகவும் அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு, மத்திய அரசுக்கும் சிஜேபி இயக்கத்தினருக்கும் இடையிலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நாளை (ஜூலை 25) நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
