சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீமை கருவேலம் மரங்களை அகற்றுவது தொடர்பாக, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேலம் மரங்களை அகற்ற அனுமதி கோரி விண்ணப்பிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை முறையாக அமல்படுத்துவதற்காக, வருவாய் துறை செயலாளரை நோடல் அதிகாரியாக நியமித்த நீதிமன்றம், அவர் ஜூலை 31-ம் தேதி நேரில் ஆஜராகி இது தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சீமை கருவேலம் மரங்களை முழுமையாக அகற்றுவதற்குத் தேவையான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் நியமித்த கண்காணிப்புக் குழுவினருடன் அரசுத் துறை செயலாளர்கள் இதுவரை எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வைகோவைப் பின்பற்றி தன்னார்வலர்கள் இக்களப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினர். இந்த உத்தரவு, தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
