நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினரும், மாணவர்களும் மேற்கொண்டுள்ள போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், மாணவர்களுக்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்தும் மாணவர்களுக்கு ஆதரவாகத் குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு என் முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களே நமது நாட்டின் எதிர்காலம். அவர்களின் குரல்கள் அனுதாபத்துடனும், கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கேட்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒவ்வொரு மாணவருக்கும் தன்னம்பிக்கை, நியாயம் மற்றும் நம்பிக்கையைத் தரும் வகையிலான கல்வி முறை அமைய வேண்டும். அத்தகைய சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
