நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியாகராஜன். புதிய அரசியல் மாற்றம், மக்கள் நலம் எனப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துத் தேர்தலைச் சந்தித்த இவர், பதவிப் பிரமாணம் எடுத்த கையோடு சர்ச்சையிலும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மக்கள் குறைகளைத் தீர்க்கும் மையமாக விளங்க வேண்டிய அரசு அலுவலகத் திறப்பு விழாவில் தியாகராஜன் நடந்துகொண்ட விதம் தொகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
பொதுவாக ஒரு மக்கள் பிரதிநிதியின் அலுவலகத் திறப்பு விழா என்றால், அங்கு தொகுதி மக்கள் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலைப்படுத்தப்படுவதுதான் வழக்கம். ஆனால் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜனோ, தொகுதி மக்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு தனது குடும்பத்தினரையே முன்னிலைப்படுத்தியுள்ளார்.

அலுவலகத்தின் உள்ளே தனது பெற்றோர் மற்றும் மனைவியை மட்டுமே அமர வைத்து, ஏதோ தனது சொந்த வீட்டு கிரகப்பிரவேச விழாவை நடத்துவது போலப் பிரம்மாண்ட பூஜை புனஸ்காரங்களைச் செய்துள்ளார். அதன் பின்னரே அவர் தனது எம்.எல்.ஏ அலுவலகத்தை முறைப்படி திறந்து வைத்தார்.அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்
வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசுப் பணத்திலும், மக்களின் வரிப்பணத்திலும் இயங்கக்கூடிய ஒரு பொது அலுவலகத்தை, தனது சொந்த வீட்டுக் சுபநிகழ்ச்சி போல செங்கல்பட்டு எம்.எல்.ஏ தியாகராஜன் நடத்தியுள்ளது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

புதிய அரசியல் பாதையை நோக்கிப் பயணிப்பதாகக் கூறும் தமிழக வெற்றிக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரே தங்களது முதல் அலுவலகத் திறப்பு விழாவைத் தனிநபர் மற்றும் குடும்ப விழாவாக மாற்றிக் கொண்டாடியிருப்பது, செங்கல்பட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
