காலங்கள் மாறினாலும், தசாப்தங்கள் கடந்தாலும் உண்மையான நட்பும் நேர்மையும் என்றும் மங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.

1991-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் அப்கைக்  நகரில் பணியாற்றியபோது, தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த எட்லா லச்சண்ணா என்பவருடன் இஸ்மாயிலுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் மேலும் மூன்று வெளிநாட்டு தொழிலாளர்களுடன் ஒரே வீட்டில் சுமார் ஐந்து ஆண்டுகள் வசித்து வந்தனர்.

அந்த காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருந்த இஸ்மாயிலுக்கு, லச்சண்ணா 120 சவுதி ரியால் (அப்போது சுமார் ரூ.1,000) கடனாக வழங்கியிருந்தார். பொருளாதார நிலை சீரானதும் அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதாக இஸ்மாயில் வாக்குறுதி அளித்திருந்தார்.

பின்னர் இருவரும் இந்தியா திரும்பிய நிலையில், செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாத காலத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும், கொடுத்த வாக்குறுதியை மறக்காத இஸ்மாயில், இணையத்தில் தேடி தெலங்கானாவின் தர்மபுரி நகருக்குச் சென்று, உள்ளூர் மக்களின் உதவியுடன் லச்சண்ணாவின் குடும்பத்தை கண்டுபிடித்தார்.

தற்போது வளைகுடா நாட்டில் பணியாற்றி வரும் லச்சண்ணாவுடன் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் மீண்டும் பேசிய இஸ்மாயில், அவரது குடும்பத்தினரிடம் ரூ.25,000 வழங்கினார்.

வெறும் 120 ரியால் கடனுக்காக இவ்வளவு பெரிய தொகையை திருப்பிச் செலுத்தியது தன்னை ஆச்சரியப்படுத்தியதாக லச்சண்ணா கூறியுள்ளார். சவுதியில் இருவரும் இணைந்து சமைத்து சாப்பிட்ட நினைவுகளை பகிர்ந்த அவர், இந்த சம்பவம் அவர்களது நீண்டகால நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version