தூத்துக்குடியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், தவெக குறித்தும் முதலமைச்சர் விஜய் குறித்தும் அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடியாக போலீசாரால் அவரது வீட்டிலேயே வைத்து கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், வீட்டின் முன் குவிந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்,
திமுக எம்.எல்.ஏ அராஜக முறையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக கோவில்பட்டி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய பேச்சுக்கு அமைப்புச் செயலாளர் விளக்கம் கொடுத்துவிட்டார். கரூர் சம்பவத்தின் போது முட்டாள் முதல்வர் என்று எல்லாம் கூறினார்கள். அப்போது நாங்கள் எதுவும் செய்யவில்லை. கருத்து சுதந்திரம் கொடுக்கக்கூடிய நாட்டில் அராஜக முறையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பார்க்க அனுமதிக்கபடவில்லை. இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறார்கள்.
சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மேலிருந்து யாரும் சொல்லி கைது செய்யப்படுகிறார்களா என்று தெரியவில்லை. சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். அன்று திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இன்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மிரட்டலுக்கு நாங்கள் அசருவது கிடையாது. நாங்கள் இப்படித்தான் இருப்போம் உயிர் இருக்கும் வரை அவர்களிடம் ( காவல்துறை) மடங்குவதற்கு ஆள் கிடையாது.
கைது செய்யப்பட்டது முறையாக நடக்கவில்லை. எம்எல்ஏ கைது செய்யப்படுவதற்கு முன் சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும். கொடுத்த பின்பு தான் கைது செய்ய வேண்டும் ஆனால் அது முறையாக நடைபெறவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
