தேர்வு முறைகேடுகள் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி Cockroach Janta Party (CJP) நடத்தி வரும் போராட்டம் இன்று (ஜூலை 21) இரண்டாவது நாளாகவும் ஜந்தர் மந்தரில் தொடர்கிறது.

இந்தப் போராட்டத்துக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். முன்னதாக அவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் முன்னேறிச் செல்லமுடியாத வகையில் பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தியதால் ராகுல்காந்தி தனது எம்.பிக்களுடன் மாணவர்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

திங்கள்கிழமை நடைபெற்ற ‘சலோ சன்சத்’ (Chalo Sansad) பேரணியின்போது போராட்டக்காரர்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே பல்வேறு இடங்களில் கடும் மோதல் ஏற்பட்டது. தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.

போராட்டக்காரர்கள் மீது அளவுக்கு மீறிய பலத்தை போலீசார் பயன்படுத்தியதாக சிஜேபி குற்றம்சாட்டியுள்ளது. அதேநேரத்தில், போராட்டக்காரர்கள் கற்கள் வீசியதுடன், போலீசாரை தாக்கி அரசு சொத்துகளை சேதப்படுத்தியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில், 118 போலீசார் மற்றும் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் வாகன சேதம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் முக்கிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிஜேபி பிரதிநிதிகள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு அவர் வலியுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் அருகே திரண்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நுழைவாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

சிஜேபி போராட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், ஆதிஷி, மணீஷ் சிசோடியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத், சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் மற்றும் நடிகை ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கைக்கும் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version