தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது பல ஆண்டுகளாக தீராத சர்ச்சையாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்துகளுக்கு இணையான கட்டணத்தில் ஆண்டு முழுவதும் இயக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசின் லஞ்சம் இல்லாத வெளிப்படையான நிர்வாகமே தாங்கள் இத்தகைய முடிவை எடுக்க முக்கியக் காரணம் என்று சங்க நிர்வாகிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாண்டியன், “கடந்த காலங்களில் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் அனுமதி பெற லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பர்மிட்கள் கிடைக்கின்றன. இதுவரை எங்கள் சங்கத்தின் கீழ் 40 பேருந்துகளுக்கு எவ்வித புகாருமின்றி முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இடைத்தரகர்களின் தலையீடு முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களுக்குத் தேவையான வேலைகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நடப்பதால், அவர்கள் தற்போது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். முறையான நிர்வாகம் இருப்பதால் மட்டுமே பொதுமக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்க முன்வந்துள்ளதாக அவர் கூறினார்.

இதனுடன், தமிழகத்தில் சுற்றுலா பேருந்துகளுக்கு என்று தனியாக அனுமதி  வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் சங்கத்தினர் முதல்வரிடம் முன்வைத்துள்ளனர். பிற மாநிலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கும், சுற்றுலா பேருந்துகளுக்கும் தனித்தனி அனுமதிகள் உள்ள நிலையில், தமிழகத்திலும் அதே முறையைக் கொண்டு வந்தால் மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சி மேலும் மேம்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசுடன் இணைந்து செயல்படத் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள உரிமையாளர்கள், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது பயணிகளுக்குக் கட்டணச் சுமை குறையும் என்றும், ஆம்னி பேருந்து துறையில் புதிய மாற்றங்கள் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version