தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.) லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சசிலேகா தலைமையில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.
சோதனை நடத்தப்படும் தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் முக்கிய நுழைவாயில் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. அலுவலகத்திற்குள் இருக்கும் ஊழியர்கள் தவிர, வெளிநபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல், சோதனை தொடங்குவதற்கு முன்பாக உள்ளே இருந்த நபர்கள் யாரும் வெளியில் செல்லவும் போலீசார் அனுமதிக்கவில்லை. அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவாகச் சென்று, அங்குள்ள கோப்புகள், கணினிகள் மற்றும் கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா? என்று சல்லடை போட்டு தீவிர சோதனை நடத்தினர். மேலும் வாகன தணிக்கை நடைபெறும் பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது.
