இன்னும் சில மணிநேரங்களில் தொடங்கும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, பல வரலாற்று சாதனைகளுக்குக் களம் அமைக்கப் போகிறது. ஆனால், இந்த முறை அரங்கேறப்போகும் ஒரு சுவாரசியம்… ரசிகர்களின் நெஞ்சங்களை நெகிழ வைக்கப் போகிறது; நெஞ்சை உலுக்கவும் போகிறது. ஆம்! ஒரே தாயின் வயிற்றில் பிறந்து, ஒரே முற்றத்தில் ஓடி விளையாடிய 7 ஜோடி சகோதரர்கள், இந்த உலகக் கோப்பைக் களத்தில் கால் பதிக்கிறார்கள்.
2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத ஒரு புதிய எமோஷனல் அத்தியாயத்தை எழுதப்போகிறது. ஆம்! இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 7 ஜோடி சகோதரர்கள் களம் காண்கிறார்கள். இதில் 4 ஜோடிகள் எதிரெதிர் நாடுகளுக்காகவும், 3 ஜோடிகள் ஒரே நாட்டுக்காகவும் களம் இறங்குகிறார்கள்.
“விதியின் விசித்திர விளையாட்டு இது! பாசக் கயிற்றால் பிணைக்கப்பட்ட அண்ணன்-தம்பிகள், நாடென்று வரும்போது எதிரெதிர் துருவங்களாக களத்தில் மோத காத்திருக்கிறார்கள்.

அந்தவகையில், முதலாவதாக, வில்லியம்ஸ் சகோதரர்கள் வெவ்வேறு நாடுகளுக்காக களம்காண்கின்றனர். ஒரே கிளப் அணிக்காக ஒன்றாக விளையாடும் அண்ணன் இனாகியும், தம்பி நிக்கோவும்… உலகக் கோப்பையில் எதிரெதிராக நிற்கிறார்கள். அண்ணன் இனாகி தனது பூர்வீக தேசமான கானாவிற்காகவும், தம்பியோ உலக சாம்பியன் ஸ்பெயின் நாட்டின் பெருமையை நிலைநாட்டுவதற்காக களமிறங்கவுள்ளனர்.

“அடுத்ததாக, டூயே சகோதரர்கள்! அண்ணன் கியூலா ஐவரி கோஸ்ட் நாட்டின் கவசமாக நிற்க, தம்பி டெசிரேவோ பிரான்ஸ் நாட்டின் அஸ்திரமாக மாறுகிறார். இதேபோல், லுகாசென் கானாவிற்காகவும், அவரது தம்பி பிரையன் பிராபி நெதர்லாந்து தேசத்திற்காகவும் களமிறங்க… சௌட்டர் குடும்பத்தின் அண்ணன் ஜான் ஸ்காட்லாந்து கொடியையும், தம்பி ஹாரி ஆஸ்திரேலிய கொடியையும் ஏந்தி மல்லுக்கட்டப் போகிறார்கள்.

இவர்களை போலவே, டெரிக் லுகாசென் மற்றும் பிரையன் பிராபி சகோதரர்களும் நெதர்லாந்தின் இளையோர் அணிகளில் ஒன்றாக வளர்ந்தவர்கள். ஆனால், காலத்தின் கோலம்… அண்ணன் டெரிக் லுகாசென் கானா தேசத்தின் அழைப்பை ஏற்று அந்த அணிக்குள் நுழைகிறார். தம்பி பிரையன் பிராபியோ, நெதர்லாந்து அணியின் ஆரஞ்சு நிற ஜெர்சியோடு அண்ணனை வீழ்த்தக் காத்திருக்கிறார்.

இதேபோல், சௌத்தார் குடும்பத்தின் கண்கள் இந்த முறை இருவேறு திசைகளைப் பார்க்கப் போகின்றன. அண்ணன் ஜான், ஸ்காட்லாந்து நாட்டின் அரணாக நிற்கிறார். தம்பி ஹாரியோ, ஆஸ்திரேலிய அணியின் அசைக்க முடியாத தூணாக மாறப்போகிறார். கத்தாரில் விளையாடிய தம்பிக்கு இது இரண்டாவது உலகக்கோப்பை, அண்ணன் ஜானுக்கு இது முதல் அத்தியாயமாகும்.

பிரான்ஸ் நாட்டின் தற்காப்புப் அரண்களாக விளங்கிவரும் தியோ ஹெர்னாண்டஸ் மற்றும் லூகாஸ் ஹெர்னாண்டஸ் சகோதரர்களில், 2018-ல் உலகக்கோப்பையை முத்தமிட்ட அண்ணன் லூகாஸ் 2022-ல் காயமடைய, தம்பி தியோ உள்ளே வந்து பிரான்ஸை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ரியல் மாட்ரிட், ஏசி மிலான், பிஎஸ்ஜி, பேயர்ன் முனிச் என உலகத்தரம் வாய்ந்த கிளப்களில் ஆடிய இந்த சகோதரர்களில்… பயிற்சியாளர் திதியர் தெஷாம்ஸ் யாரை களம் இறக்கப் போகிறார்? அண்ணனா? தம்பியா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இவர்களை போலவே, குராசோ நாட்டின் கால்பந்து வரலாற்றில் 72 போட்டிகளுடன் அதிக கேப்ஸ் வென்ற அண்ணன் லியாண்ட்ரோவுடன், 50 சர்வதேச போட்டிகளை நெருங்கும் தம்பி ஜுனின்ஹோவும் இணைந்து மிட்ஃபீல்டில் மாயாஜாலம் செய்யக் காத்திருக்கிறார்கள்.

கேப் வெர்டே நாட்டின் மிட்பீல்டை ஆளப்போகும் சகோதரர்களான, தம்பி டெராய் 2022-ல் சர்வதேச அரங்கிற்கு வர, இரண்டு ஆண்டுகள் கழித்து அண்ணன் லாரோஸும் கைகோர்த்தார். இப்போது உலகக்கோப்பை மேடையில் இருவரும் இணைந்து தங்கள் நாட்டின் கனவை சுமக்கிறார்கள்.
பாசம், தேசப்பற்று, லட்சியம், கண்ணீர், கொண்டாட்டம்… என அத்தனையையும் இந்த ஒரே உலகக்கோப்பையில் நாம் பார்க்கப் போகிறோம். “ஒரே கருவறையில் தோன்றியவர்கள், இன்று இருவேறு தேசத்தின் கனவுகளைச் சுமந்து நேருக்கு நேர் மோதப் போகிறார்கள்! மைதானத்தில் சிந்தப்போவது வியர்வை மட்டுமல்ல… பாசமும்தான்! ஆட்டநேர முடிவில் வெல்லப்போவது இரத்த உறவா? அல்லது தேசப்பற்றா? ஒரு பக்கம் கண்ணீர்… மறுபக்கம் கொண்டாட்டம்! விடை சொல்லக் காத்திருக்கிறது 2026 ஃபிஃபா உலகக்கோப்பை!”
