திருச்சி அருகே காவிரி ஆற்றில் நள்ளிரவில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்காவிட்டால் மே 7-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரியும், இதில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் மே மாதம் 7-ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதே வேளை தொட்டியம் காவல் நிலையம், முசிறி சப் கலெக்டர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.
மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்ல. ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் செயல்படாத நிலையில், மணல் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சில சமூக விரோத சக்திகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் எல்லைக்குட்பட்ட திருவோங்கிமலை கொக்குவெட்டியான் கோவில் அருகே நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை காவிரி ஆற்றுப்பகுதியில் கரையை வெட்டி மணல் திருடப்படுகிறது.
தினசரி 70 முதல் 100 கனரக லாரிகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக மணல் ஏற்றப்பட்டு கடத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த மணலை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது மட்டும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர். உண்மையான மணல் கொள்ளையர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகத் தெரிகிறது.
இந்தச் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் கோரி ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
எனவே, இதனைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணைந்து வரும் மே மாதம் 7ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மூன்று நாட்களுக்குப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஊடகங்கள் முன்னிலையில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களையும், நபர்களையும் சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
