தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை , ஈரோடு , திருப்பூர் , கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி , ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்த ஆடைகளின் சுமார் 68 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது. ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது துணி நூல் ஆகும். பருத்தி விலையை பொறுத்து நூல் நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும்.
கடந்த ஆண்டு துவக்கத்தில் நூல் விலை உயர்வடைந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11% வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பருத்தி விலை குறைந்தது நூல் விலையில் மாற்றம் இல்லாமல் சராசரி விலையில் இருந்து வந்தது.
ஆனால் கடந்த டிசம்பர் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிக்கப்பட துவங்கியுள்ளது, இதன் காரணமாக உள்நாட்டு பருத்தியும் கேண்டி ரூ.4000-ரூ.5,500 வரை விலை உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி நூல் விலை 7 ரூபாய் உயர்ந்திருந்தது.
இதனை தொடர்ந்து மார்ச் மாத தொடக்கத்தில் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் மார்ச் 16ம் தேதி மேலும் 7 ரூபாய் அதிகரித்தது. இந்த நிலையில் ஏப்ரல் 1 ம் தேதி நூல் விலையை 10 ரூபாய் உயர்த்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி மீண்டும் அனைத்து ரக நூல்களுக்கும் பத்து ரூபாய் விலையை உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 34 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்திருப்பதால் பின்னலாடை உற்பத்தி துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது நடப்பு(மே) மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து ரகங்களுக்கும் 7 ரூபாய் உயர்த்தி விலையை அறிவித்துள்ளது. இதனால் கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் நூல் விலை 41 ரூபாய் உயர்ந்துள்ளது. ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பாலிஸ்டர் நூல் மற்றும் துணிகளின் விலை உயர்ந்து வரும் இச்சூழ்நிலையில் மீண்டும் நூல் விலை உயர்வடைந்துள்ளது தொழில்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நடப்பு ஆண்டு துவக்கத்தில் பஞ்சு கேண்டி விலை 50 முதல் 55 ஆயிரம் வரை இருந்த நிலையில், தட்டுப்பாடு காரணமாக தற்பொழுது கேண்டி பஞ்சு 65 ஆயிரம் முதல் 68 ஆயிரம் வரை விற்பனை ஆகிறதாகவும் இதன் காரணமாகவே தற்பொழுது பஞ்சு விலை ஏற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விலை உயர்வு காரணமாக 10-ம் நம்பர் கோம்டு நூல் கிலோ ரூ.224, 16-ம் நம்பர் ரூ.234, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.292, 24-ம் நம்பர் ரூ.304, 30-ம் நம்பர் ரூ.314, 34-ம் நம்பர் ரூ.334, 40-ம் நம்பர் ரூ.352, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.289, 24-ம் நம்பர் ரூ. 297, 30-ம் நம்பர் ரூ.300, 34-ம் நம்பர் ரூ. 323, 40-ம் நம்பர் ரூ.342-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
