தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கஞ்சி தொட்டி திறக்க முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாகக் கூறி, 19 சாயப்பட்டறைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் அண்மையில் சீல் வைத்தனர். இதனை நம்பி 20 ஆயிரத்திற்கும் மேற்ட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
அரசின் இந்த நடவடிக்கையால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தொழிலாளர்கள் கடந்த ஒருவாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களது சாயப்பட்டறைகளை முறைப்படுத்துவதற்கு அரசு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செங்குந்தர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி சங்கரன்கோவில் நகர் பகுதியில் ஊர்வலமாகச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, வாழ்வாதார இழப்பை வெளிப்படுத்தும் விதமாக கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, உரிய அனுமதியின்றி கஞ்சி தொட்டி திறக்க முயன்றதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் சங்கரன்கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
