தமிழக நிதித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் பெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் தற்போது இருபிரிவாகி உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏக்களும், சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் 25 எம்.எல்.ஏக்களுமாக பிரிந்து கிடக்கின்றனர். இதில் அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், சி.வி.சண்முகமும் செயல்படுவதாக இரண்டு தரப்பும் சபாநாயகரைச் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளனர்.
முன்னதாக எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவளித்தனர். அப்போது கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்டுப்பாட்டை இவர்கள் மீறியதாகக் கூறி 25 எம்.எல்.ஏக்களையும், இவர்களுக்கு ஆதரவான மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
இதனால் அதிமுகவில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் யார் என்பதை சபாநாயகர் விரைந்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என சட்டப்பேரவை தலைவர் பிரபாகரும் கூறியிருந்த நிலையில் இன்று நிதித்துறை அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தனியறையில் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில், அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவர் யார் என்பதை சபாநாயகர் விரைந்து அறிவிப்பார் எனத் தெரிகிறது.
இதனிடையே அதிமுகவில் நடைபெற்று வரும் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில் பொதுக்குழுவைக் கூட்ட எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் கூடித்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்வார்கள். எனவே தற்போதுள்ள 1800 பொதுக்குழு உறுப்பினர்களிடமும் பொதுக்குழுவை கூட்டுவதற்காக கையெழுத்து பெறும் நடவடிக்கையில் எஸ்.பி.வி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கேற்ப சுமார் 1000த்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
