அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கப் போவதாக திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், சட்டப்பேரவை உறுப்பினராகக் கடந்த 10 ஆண்டுகளாகத் தனது குழுவுடன் நேரம் பாராமல் உழைத்தது தனது கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு தனிப்பட்ட குடிமகனாகத் தனது நேரத்தை தானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன் சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகத் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேரமின்மை காரணமாகவும், அமைச்சராக இருந்த போது வெளிநாடுகளுக்குச் சென்று உரையாற்றப் பல சமயங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாலும் பல்வேறு வாய்ப்புகளைத் தம்மால் ஏற்க முடியாமல் போனதாக அவர் கூறியுள்ளார். தற்போது கிடைத்துள்ள இந்த ஓய்வுக் காலத்தில், அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று உரையாற்ற உள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பிரபல பதிப்பகத்துடன் இணைந்து புத்தகம் ஒன்றை வெளியிட ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதன் பணிகள் திட்டமிட்ட காலத்தைவிட பின்தங்கியுள்ளதால், இந்த ஓய்வுக் காலத்தைப் புத்தகம் எழுதுவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளப் போவதாகவும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமக்கு 60 வயது நிறைவடைந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது உடல்நலத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ஒரு சீரான கால அட்டவணை மற்றும் சிறந்த வாழ்க்கை முறையின் மீது கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி வாக்காளர்கள் மற்றும் தமக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ள பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அடுத்த தேர்தல் வரும் வரையிலாவது இனி மக்கள் பிரதிநிதியாக இருக்கப் போவதில்லை என்ற எதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு வருவதாகக் கூறியுள்ளார். பொதுச் சேவையில் தமக்குள்ள ஆர்வம் சிறிதும் குறையவில்லை என்றும், புத்துணர்ச்சியுடனும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் மீண்டும் அரசியல் களத்திற்குத் திரும்புவேன் என்றும் தனது பதிவில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.
