தமிழகத்தின் நம்பர் 1 துறையாக மருத்துவத்துறை வர வேண்டும். அதற்காக மருத்துவத்துறையினர் அனைவரும் பணியாற்ற வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜை, துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அருண்ராஜ்,
தமிழக மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இந்த அரசை தேர்வு செய்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை உறுதியாக்கும் வகையில், ஒரு நல்ல ஆட்சியை தர வேண்டும். அதற்கு நேர்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார்.
தமிழகத்தின் நம்பர் 1 துறையாக மருத்துவத் துறை வர வேண்டும் அதற்காக நீங்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
நான் ஒரு மருத்துவராக பணியாற்றி உள்ளேன்,எனக்கு எப்படி அரசு அலுவலகம் செயல்படும் என தெரியும்.
இருப்பினும் மக்கள் மாற்றத்தை நம்பி வாக்கு அளித்துள்ளனர் அதனை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினார்.

அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் தரேஸ் அகமது உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தற்போது, சென்னையில் குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் தொற்று பரவி வருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக அமைச்சர் அருண்ராஜை, டிஜிபி சந்திப்ராய் ரத்தோர் மரியாதை நிமித்தமாக நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
