தமிழ்நாட்டில் கடந்தாண்டு எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இடம்பெயர்ந்து சென்றவர்கள், இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பொருட்டு எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் கூட, பணிகளை மத்திய அரசு நிறுத்தவில்லை. வீடு வீடாக சென்று பூத் அலுவலர்கள் விண்ணப்ப படிவங்களை மக்களுக்கு விநியோகித்ததுடன், பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் பெற்றனர்.

கடந்த அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி 6.41கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர் பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ம் தேதி முதல் பிப்.10-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கன அவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெயர் சேர்க்க 17.10லட்சம் பேரும், நீக்கம் செய்யக் கோரி 1.84லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

இந்த சூழலில் இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி இன்று நிறைவு பெறுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ம் தேதி வெளியிடப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version