ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றின் ‘எலிமினேட்டர்’ போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியுடன் மோதப்போகும் அந்த 4-வது அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தனது கடைசி லீக் போட்டியில் வலுவான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 18 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றது. இருப்பினும், ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளை விட நெட் ரன்ரேட் சற்று குறைவாக இருந்ததால், புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தையே எஸ்ஆர்ஹெச் பெற்றது. இதன் காரணமாக அந்த அணி நேரடியாக ‘எலிமினேட்டர்’ சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பிளே-ஆஃப் சுற்றின் முதல் மூன்று இடங்களை ஆர்சிபி, குஜராத் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் உறுதி செய்துவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் ஒரேயொரு 4-வது இடத்திற்கு தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 4 அணிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, 13 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 13 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் கடைசி வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறது.

புள்ளி மற்றும் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கே 4-வது இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ராஜஸ்தான் அணி தனது கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் நேரடியாக எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ராஜஸ்தான் தோற்று, பஞ்சாப் அல்லது கொல்கத்தா அணிகள் தங்களது கடைசிப் போட்டிகளில் பெரிய மார்ஜினில் வெற்றி பெற்றால், ரன்ரேட் அடிப்படையில் எலிமினேட்டர் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு மாறும்.

கடைசி லீக் போட்டிகளின் முடிவிலேயே, மே 27 அன்று தர்மசாலாவில் நடைபெறவிருக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளப் போகும் ‘அந்த’ தகுதியான அணி எது என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version